விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் படித்துறை அதன் சுற்றுப்புற ஆற்றுப்படுகைகளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பரிகாரம் செய்யும் மக்கள், பழைய துணிகளையும், மறைந்தவர்களின் படங்களையும், குப்பைகளையும் கொட்டி தாமிரபரணி ஆற்றை அசுத்தம் செய்வதாகவும், இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கடந்த 18-ந்தேதி மாவட்ட கலெக்டர் சுகுமார் ஆய்வு செய்தார். அப்போது விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகளிடம் தாமிரபரணி ஆற்றில் துணிகள் போடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி கடந்த 18-ந்தேதி முதல் நேற்று வரை நகராட்சி ஆணையாளர் மகாதேவன், சுகாதார ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணிகளை போடுவோர் மீது நடவடிக்கை எடுத்ததின் பேரில் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறிந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன், கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணி நகராட்சி ஆணையாளர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி ரத வீதி வழியாக சென்று மீண்டும் நகராட்சியை அடைந்தது.