சென்னை,
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை மெட்ரோ ரெயில் பயண ஒழுங்குமுறைகள்: விதிகளை மீறி மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
மெட்ரோ ரெயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
மெட்ரோ ரெயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக:
- அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல்;
- செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது;
- அலைபேசியில் மெட்ரோ ரெயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode);
மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
இந்தச் சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மெட்ரோ ரெயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.