சென்னை,
சென்னையில் மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த மழைநீர் வடிகால்களில் குடியிருப்பு மற்றும் இதர பயன்பாட்டு கட்டங்களில் இருந்து கழிவு நீரினை சட்டவிரோதமாக சிலர் மழைநீர் வடிகாலில் இணைப்பதால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதோடு, மழைக்காலங்களில் மழைநீரின் தடையற்ற ஓட்டத்தைப் பாதித்து, மழைநீர் வடிகால் அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடு பெரிதும் பாதிக்கின்றது. இதன் காரணமாக, சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கும் நிலையும் உருவாகிறது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகளை ஏற்படுத்துபவர்கள் மீது அபராதம் விதித்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்பு ஏற்படுத்துவதை முற்றிலும் தடுத்திடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைந்து மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகளைக் கள ஆய்வு மேற்கொண்டு, இணைப்புகளைக் கண்டறிந்து, தடுத்தல், அடைத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கற்று வாரிய அலுவலர்களுடன் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் வடிகால் மற்றும் சாலையில் விடப்படும் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளைக் கண்டறிந்து தடுத்தல், அடைத்தல் மற்றும் இணைப்பை ஏற்படுத்திய உரிமையாளர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மழைநீர் வடிகால் மற்றும் சாலையில் கழிவுநீரை வெளியேற்றும் இடங்கள், கழிவுநீர் வெளியேற்றும் கட்டட உரிமையாளர்கள்/ஆக்கிரமிப்பாளர்கள், ஆய்வு முடிவுகள், சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை அடைத்து முடிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் விதிக்கப்பட்ட/வசூலிக்கப்பட்ட அபராதங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய ஒரு கூட்டுப் பதிவேட்டை (Joint Register) பராமரித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கட்டடங்களின் உரிமையாளர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் வாயிலாக, சட்டப்பூர்வமான கழிவுநீர் இணைப்புகளைப் பெற வழிவகை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் மழைநீர் வடிகால் அமைப்பை கழிவுநீர் வெளியேற்றுவதற்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தடுத்திட வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மன்றத் தீர்மானத்தின்படி, சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் மற்றும் தெருக்களில் கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பான விதிமீறல்களுக்கு கீழ்காணும் அபராதங்கள் விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது .உரிய சட்டப் பிரிவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
1. சாதாரண கட்டடம் (Ordinary building)- 10,000 - 25,000
2. சிறப்பு கட்டடம் (Special building) - 50,000 - 1,00,000
3. பன்னடுக்குக் கட்டடம் (Multi-storeyed building) - 2,00,000 - 5,00,000
மழைநீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவு நீர் இணைப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முற்றிலும் தடுக்கும் விதமாக, ஒவ்வொரு மண்டல அலுவலரும் ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) நியமித்து மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், இது தொடர்பான அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு சமர்ப்பித்திடவும், தொடர்ந்து காலமுறை இடைவெளியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோத இணைப்புகளை முற்றிலும் தடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வசூலிக்கப்பட்ட அபராத விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி செயலி (GCC App)-ல் உடனடியாக பதிவேற்றம் செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.