தமிழக செய்திகள்

பெருங்குடி குப்பை வளாக தீ விபத்து; மாநகராட்சி ஆணையர் சமீரன் நேரில் ஆய்வு

குப்பைகள் சேகரிக்கப்படும் பகுதியில் இன்று திடீர் தீ பற்றியதை தொடர்ந்து உடனடியாக முற்றிலும் தீயணைக்கப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தினசரி குப்பைகள் சேகரிக்கப்படும் பகுதியில் இன்று திடீர் தீ பற்றியதை தொடர்ந்து உடனடியாக முற்றிலும் தீயணைக்கப்பட்டது.

தீ விபத்து

பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தினசரி குப்பைகள் சேகரிக்கப்படும் பகுதியில் இன்று (15.06.2026) தீப்பற்றியதைத் தொடர்ந்து, மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்புடன் தீயணைப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தினசரி குப்பைகள் சேகரிக்கப்படும் பகுதியில் இன்று (15.06.2026) மாலை தீப்பற்றியது. இப்பகுதியில் தீப்பற்றிய தகவல் கிடைத்தவுடன், மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரனின் உத்தரவின்படி, போர்க்கால அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் வாகனங்களுடன், அலுவலர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த தீயணைப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தீ முழுமையாக அணைப்பு

தீயை கட்டுப்படுத்தும் பணிக்காக தண்ணீர் பௌசர்கள் (Water Bowsers), ரீசைக்ளர்கள் (Recyclers), ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் லோடுகள் பயன்படுத்தப்பட்டன.

அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்களின் தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.