தமிழக செய்திகள்

டெலிவரி நிறுவன குடோனில் தீ விபத்து; காவலாளி மூச்சுத் திணறி உயிரிழப்பு

இன்று காலை டெலிவரி நிறுவன குடோனில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்துள்ளது.

சென்னை,

டெலிவரி நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தின்போது கரும்புகையில் சிக்கி காவலாளி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.

குடோனில் தீ விபத்து

சென்னை பெரவள்ளூர் அடுத்த அகரம் பகுதியில் தனியார் டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் காவலாளியாக மாத்தூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை டெலிவரி நிறுவன குடோனில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்துள்ளது. இதனை பார்த்த காவலாளி ராமமூர்த்தி குடோனிற்குள் சென்றுள்ளார். குடோனில் இருந்த கரும்புகை ராமமூர்த்தியை சூழ்ந்தது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த செம்பியம் மற்றும் குளத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கரும்புகையில் சிக்கி உயிரிழந்த ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குடோனில் பற்றிய தீயை சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முற்றிலும் அணைத்தனர்.

இது குறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT