விருதுநகர்,
இனி ஒரு உயிர் கூட இது போன்ற விபத்துகளில் பறிபோகக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விருதுநகர் மாவட்டம் நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த மாதம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோத பட்டாசுக் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பது தொழிலாளர்களின் பாதுகாப்பில் தவெக அரசு கொண்டுள்ள அலட்சியத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
இனி ஒரு உயிர் கூட இது போன்ற விபத்துகளில் பறிபோகக் கூடாது. எனவே, அரசு அனைத்து ஆலைகளிலும் போர்க்கால அடிப்படையில் முறையான பாதுகாப்புத் தணிக்கை செய்வதோடு, தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மற்றும் அவசர கால வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.