சென்னை,
சென்னையில் உள்ள ஆவடியில் அமைந்துள்ள இந்திய விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்த 412 ஆட்டோமொபைல் டெக்னீஷியன் பிரிவு அக்னிவீரர்கள் இன்று பாதுகாப்பு படையில் இணைந்தனர். அதோடு பயிற்சி முடித்த அக்னிவீரர்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை பயிற்சி தலைமையகத்தின் கட்டளை தொழில்நுட்ப பயிற்சி அதிகாரி ஏர் வைஸ் மார்ஷல் அதுல் லக்ஷ்மாந்தாஸ் கோலானி பங்கேற்றார். அணிவகுப்பில் பயிற்சி மாணவர்கள் வெளிப்படுத்திய துல்லியம், ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.
அக்னிவீரர் பயிற்சி மாணவர் ஜாதவ் வைஷ்ணவ் ராஜுவுக்கு 'சிறந்த பன்முகத் திறனாளர்' கோப்பை வழங்கப்பட்டது. பயிற்சி நிறைவு அணிவகுப்பில் உரையாற்றிய ஏர் வைஸ் மார்ஷல் அதுல் லக்ஷ்மாந்தாஸ் கோலானி, உலகளாவிய பாதுகாப்புச் சவால்களின் மாறிவரும் தன்மையை உணர்ந்து, அனைத்து அக்னிவீரர்களும் விழிப்புடனும், சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டும், தங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தங்களுக்கு ஒதுக்கப்படும் அனைத்துப் பணிகளையும் அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் மேற்கொள்ளத் தயாராக இருக்குமாறும், புதிய தொழில்முறைத் திறன்களைப் பெறுவதற்கு தங்கள் மனதை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.