தமிழக செய்திகள்

தமிழகத்தில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கு யு.ஜி.சி. ஒப்புதல்

சிகிச்சைக்காக எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சென்னை

தமிழகத்தில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக செயல்பட உள்ள மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்திற்கு பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம்

உலகின் முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், ஆஸ்திரேலியாவின் ‘குரூப் ஆப் எய்ட்’ அமைப்பின் உறுப்பினராகவும் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகம் சென்னையில் தனது வளாகத்தை அமைக்க உள்ளது. இதற்காக சென்னை வளாகத்துக்கு யு.ஜி.சி. ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வளாகத்தை நிறுவும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற பெருமையை மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள வளாகத்தின் மூலம் மாணவர்கள் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கல்வியை நேரடியாக பெறுவதுடன், உலகளாவிய கல்வி வலையமைப்புகள் மற்றும் தொழில்துறை சார்ந்த அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிவுசார் நகரம்

இதுகுறித்து தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ‘தமிழகத்தில் சர்வதேச தரத்திலான உயர்கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே 870 ஏக்கர் பரப்பளவில் ‘அறிவுசார் நகரம்’ அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தற்போது மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகம் வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட உள்ளது. பின்னர் இந்த வளாகத்தை அறிவுசார் நகரத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.’ இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT