சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல் முடிவுகள் மே மாதம் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் (தி.மு.க., அ.தி.மு.க.) ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
என்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் த.வெ.க.வுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. ஒரு வழியாக, காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (2), இந்திய கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால், த.வெ.க.வின் (107) பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் (மே) 10-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அடுத்த நாள் (மே 11) சட்டசபையில் நடந்த நிகழ்வில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் மு.வெ.கருப்பையா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தொடர்ந்து, மே 13-ந் தேதி சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன. 5 பேர் நடுநிலை வகித்தனர். தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
அதன்பின்னர், மே 21-ந் தேதி நடைபெற்ற 2-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், 22-ந் தேதி நடைபெற்ற 3-வது அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
17-வது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 146 பேர் புதியவர்கள். முதல் முறையாக அவைக்கு வருபவர்கள். எனவே, சட்டசபை மரபுகள் என்ன, அவையில் எதை பேசவேண்டும், எதை பேசக்கூடாது என்பதை எம்.எல்.ஏ.க்கள் தெரிந்துகொள்வதற்காக 2 நாள் புத்தாக்க பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றுகிறார்.
இதற்காக, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இருந்து காலை 9.30 மணியளவில் கவர்னர் அர்லேகர் காரில் புறப்படுகிறார். காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் அவரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்கிறார்.
அதன்பின்னர், கவர்னர் அர்லேகர் அவைக்கு அழைத்து வரப்படுகிறார். காலை 10 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு வரும் அவர், தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்குகிறார். இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று தெரிகிறது.
அதன்பின்னர், கவர்னர் அர்லேகரின் உரையை, வலதுபுற இருக்கையில் அமர்ந்திருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார். இடதுபுற இருக்கையில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஷஜன் சிங் சவான் அமர்ந்திருப்பார்.
கூட்டம் முடிந்ததும் அனைத்து உறுப்பினர்களிடமும் விடைபெற்று கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார். அதன்பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். அனேகமாக 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.