தூத்துக்குடி,
தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வங்கக்கடலில் உருவான புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் மீன்பிடி தொழில் முடங்கியிருந்தது.
இந்த நிலையில், மீன்வளத்துறையினர் நேற்று முன்தினம் கடலுக்கு செல்ல அனுமதி அளித்ததை தொடர்ந்து, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற ஒரு சில நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பினர். ஆனால், கடலில் எதிர்பார்த்த அளவு மீன் இல்லாததால், மீனவர்கள் மிகவும் குறைந்த அளவு மீன்களுடனேயே கரை திரும்பினர்.
நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், காலை முதலே திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், விசைப்படகு மீனவர்கள் இன்னும் கடலுக்கு செல்லாததால், வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளும் திரேஸ்புரம் துறைமுகத்தில் குவிந்தனர்.
வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருந்ததால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
நேற்றைய மீன் விலை நிலவரம்
• சீலா மீன்: கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை
• சூப்பர் நண்டு: கிலோ ரூ.1,000 வரை
• விளை, ஊழி, பாறை மீன்கள்: கிலோ ரூ.550 முதல் ரூ.700 வரை
• குறுவலை மீன்: கிலோ ரூ.430 வரை
• செப்புலி மீன்: கிலோ ரூ.400 வரை
• கேரை மீன்: கிலோ ரூ.230 வரை
• சாளை மீன்: ஒரு கூடை ரூ.2,500 வரை
புயல் எச்சரிக்கைக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு மீன்கள் குறைவாக கிடைத்தாலும், ஏலம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்து மீன்களும் நல்ல விலைக்கு விற்று தீர்ந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.