தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை: 4 பேர் கைது

தாளமுத்துநகர் மேட்டுப்பட்டி உமையம்மாள் கோவில் அருகே அமர்ந்து மீனவர் ஒருவரும், அவரது நண்பரும் மது அருந்தியபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த மீனவர் ஸ்னோவின் (வயது 26). இவரும் இவரது நண்பரான திரேஸ்புரத்தைச் சேர்ந்த சூசை(28) என்பவரும் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு சென்று விட்டுத் திரும்பியுள்ளனர். பின்னர், தாளமுத்துநகர் மேட்டுப்பட்டி உமையம்மாள் கோவில் அருகே அமர்ந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்னோவினை சரமாரியாக குத்தினர். இதனை தடுக்க முயன்ற சூசைக்கும் தலையில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்ட அப்பகுதியினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ஸ்னோவின் பரிதாபமாக உயிரிழந்தார். சூசைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிங்ஸ்லிதேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த லூர்தம்மாள்புரம் மாலைராஜ் மகன் சந்தனராஜ்(எ) பாண்டி(23), சங்குகுளி காலனி இசக்கிமுத்து மகன் முத்துக்குமார்(எ) கருப்பு(20), முனியசாமி மகன் இசக்கிமுத்து(19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.