சின்னமுட்டம்,
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தடை காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.
மீன்பிடி தடை காலம் வருகிற 14-ந் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீனவர்கள் தங்களது விசை படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களது விசைப்படகுகளுக்கு வர்ணம் தீட்டுவது, என்ஜின்களில் உள்ள பழுதை சரி செய்வது, சேதம் அடைந்த வலைகளை சரிசெய்வது, புதிய வலைகளை வாங்குவது போன்ற பணிகளிலும் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
வருகிற 15-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். பின்னர் அவர்கள் அன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும் முதல் நாளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், திருக்கை, கைக்கொழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மீனவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மீன்பிடி தடை காலம் நிறைவடைய உள்ள நிலையில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இப்போதே களை கட்ட தொடங்கிவிட்டது.