புதுச்சேரி,
கடலில் மீன்வளத்தை பெருக்க, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடைகாலத்தில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஏப்.15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்தது.
இந்த தடைக்காலத்தில் தங்கள் படகுகள், வலைகளைச் சீரமைக்கும் பணிகள், படகுகள் மற்றும் இயந்திரங்களில் பழுது நீக்குதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து புதுச்சேரி அடுத்த காரைக்காலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.