ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலை விலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் இலங்கை மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு ராமேசுவரத்தில் இருந்து செல்ல 75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண் டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) முதல் 1-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.