நெல்லை,
தமிழகத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுமுழுவதும் பல்வேறு திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் புகழ்பெற்ற முக்கிய விழாவான ஆனிப் பெருந்தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்று திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் கோவில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பிரமாண்டமான தேர்களில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள சுவாமி தேரும் ஒன்றாகும். எந்த எந்திரங்களின் உதவியும் இன்றி முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே வடம் பிடித்து இழுக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க இந்த தேரோட்டத்தை காண்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நெல்லையில் திரள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆனித் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அப்போது விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் ஓடும்.
இதையொட்டி சுவாமி நெல்லையப்பர் தேரில் பொருத்தப்படும் மரத்தாலான சுவாமி சிலைகள் மற்றும் அலங்கார மர சிற்பங்களுக்கு புதிய வண்ணங்கள் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பாரம்பரிய முறைப்படி வண்ணம் பூசும் கலைஞர்கள் தேரின் பல்வேறு அடுக்குகளில் உள்ள மர சிற்பங்களை சீரமைத்து, பளபளப்பான வண்ணங்களை தீட்டி அழகுபடுத்தி வருகின்றனர்.
மேலும் அம்பாள் தேரில் சாரம் கட்டி, அலங்கார தட்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளன. குதிரை பொம்மைகளும் பொருத்தப்பட்டு உள்ளன. இத்துடன் தேரோடும் 4 ரத வீதிகளை சீரமைத்தல், பக்தர்களுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் மாநகராட்சி நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.