தமிழக செய்திகள்

திருச்சியில் இருந்து கொழும்புக்கு விமான சேவை மீண்டும் தொடக்கம்

திருச்சியில் இருந்து கொழும்புக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

செம்பட்டு,

ஆரம்பகால கட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருச்சிக்கு பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படவில்லை. அதன்பிறகு, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஓமன் உள்பட வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து இயக்கப்பட்டு வந்த இலங்கைக்கான விமான சேவை முடங்கியது. இதனால், திருச்சியிலிருந்து இலங்கை செல்ல விருந்த பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொழும்புவிற்கும் சிறப்பு விமானங்கள் இயக்குவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்து பயணிகளின் முன் பதிவையும் தொடங்கியுள்ளது.

அந்த விமானங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கொழும்பில் இருந்து புறப்பட்டு காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறது. இங்கிருந்து மீண்டும் திருச்சியிலிருந்து கொழும்புவிற்கு காலை 10 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த விமான சேவை திருச்சியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று தெரிய வருகிறது.