கோவை குற்றாலம் அருவி 
தமிழக செய்திகள்

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

சாடிவயல் சோதனைச் சாவடியிலேயே சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்,

கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவையின் முக்கிய சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அபாய அளவைத் தாண்டிய நீர்வரத்து

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு வழக்கத்தை விடப் பெருமளவில் அதிகரித்துள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அருவிப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வனத்துறை அதிரடி உத்தரவு

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, போலுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் கோவை குற்றாலத்திற்கு செல்ல மறு அறிவிப்பு வரும் வரை இன்று (வியாழக்கிழமை) தற்காலிகத் தடை விதித்துள்ளனர். சாடிவயல் சோதனைச் சாவடியிலேயே சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மீண்டும் திறப்பது எப்போது?

மலைப் பகுதிகளில் மழை குறைந்து, நீர்வரத்து முற்றிலும் சீரான நிலைக்குத் திரும்பிய பிறகே வனத்துறையினர் ஆய்வு மேற்கொள்வார்கள். அதன் பின்னரே அருவி மீண்டும் திறக்கப்படும் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை சுற்றுலா பயணிகள் வனத்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT