தென்காசி,
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (புதன்கிழமை) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அருவிகளுக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்தது.
நீர்வரத்து அதிகரித்து பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அருவிக்கரைப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். நீர்வரத்து சீரான பிறகே மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.