தமிழக செய்திகள்

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பு கருதி 2 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெரியகுளம்,

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ள கெவி உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

குளிக்க தடை

இந்தநிலையில், கடந்த மாதம் 15-ந்தேதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து காலாண்டு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

சுற்றுலா பயணிகள்

இந்நிலையில் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால், பாதுகாப்பு கருதி 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் நுழைவு பகுதியில் உள்ள இரும்பு கதவு பூட்டப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

SCROLL FOR NEXT