திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்கத் தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அருவியின் தடாகம் மற்றும் பாதுகாப்புப் பாலத்தைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அங்கு வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையிலும் அருவியில் குளிக்க வனத்துறையினர் ஏற்கனவே தடை விதித்திருந்தனர். இன்று (புதன்கிழமை) 3-வது நாளாகவும் நீர்வரத்து குறையாததால், குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், விடுமுறை மற்றும் சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் ஏமாற்றமடையாமல் இருக்க வனத்துறையினர் மாற்று ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, அருவியின் இயற்கை அழகைத் தொலைவிலிருந்து பாதுகாப்பாகப் பார்த்து ரசிக்க மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அருவிப்பகுதியில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.