திருப்பூர்,
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குளிப்பட்டி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மழையில்லாமல் வறட்சியால் தவித்த விவசாயிகள் தற்போது மழை பெய்வதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.