தமிழக செய்திகள்

தமிழக மின்வாரிய கள உதவியாளர் தேர்வில் முதல் முறையாக 1,472 பெண்கள் தேர்ச்சி!

பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில், மின்கம்பம் ஏறுவதற்காக சிறப்பு காலணிகள் வழங்கப்பட்டன.

சென்னை,

தமிழக மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் முதல் முறையாக 1,472 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கள உதவியாளர் தேர்வு

தமிழக மின்வாரியத்தில் மின் கம்பம் நடுதல், மின் கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை கள உதவியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.

இதில் தகுதி பெற்ற 5,181 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 13 மையங்களில் கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை உடல் தகுதி தேர்வுகள் நடைபெற்றன.

சிறப்பு காலணிகள்

பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் வகையில், மின்கம்பம் ஏறுவதற்காக சிறப்பு காலணிகள் வழங்கப்பட்டன. மேலும், தேர்வு நடைமுறைகள் குறித்து விளக்கும் வீடியோவும் தயாரித்து தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது.

1472 பெண்கள் தேர்ச்சி

இந்த தேர்வில் பங்கேற்ற 2,752 ஆண் தேர்வர்களில் 2,406 பேரும், 2,021 பெண் தேர்வர்களில் 1,472 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 3,878 பேர் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்களில் 87.42 சதவீதம் பேரும், பெண்களில் 72.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மின்வாரிய வரலாற்றில் கள உதவியாளர் உடல் தகுதி தேர்வில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தேர்ச்சி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டு கேங்மேன் பணிக்கான தேர்வில் 14 பெண்கள் மட்டுமே உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

SCROLL FOR NEXT