சென்னை
முதல்முறையாக திருட முயன்று சிக்கிய சாப்ட்வேர் என்ஜினீயர் போலீசிடம் அதிர்ச்சி அளிக்கும் காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூர், கெனால் சாலை பகுதியில் வசிப்பவர் மங்கள்சந்த் (வயது 63). இவர், சென்னை இந்திராநகர் 17-வது குறுக்குத்தெருவில் நகை அடகு கடையை நடத்தி வருகிறார். கடந்த 11-ந்தேதி இவரது கடைக்கு அருகில் வசிப்பவர்கள், அதிர்ச்சி தகவல் ஒன்றை செல்போன் மூலம் பேசி தெரிவித்தனர். அடகு கடையின் பூட்டை, மர்மநபர் ஒருவர் உடைத்து கொண்டிருப்பதாக அந்த தகவலில் கூறினார்கள்.
உடனடியாக மங்கள்சந்த், தனது கடைக்கு ஓடிவந்தார். அக்கம் பக்கத்து பொதுமக்களையும் உதவிக்கு அழைத்தார். அனைவரும் அங்கு கூடினார்கள். கூட்டத்தை பார்த்ததும், அடகு கடையின் பூட்டை உடைத்துக்கொண்டிருந்த மர்ம நபர் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து திருவான்மியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (வயது 25) என்று தெரியவந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அவர், 'சாப்ட்வேர்' என்ஜினீயர் ஆவார். சென்னை பெருங்குடியில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
அடகு கடையை உடைத்து திருட முயற்சித்தது ஏன்? என்று போலீசார் அவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 'கம்ப்யூட்டர்' நிறுவன வேலையில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கிடைப்பதாகவும், 'ஆன்லைன்' முதலீட்டில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனில் சிக்கியுள்ளதாகவும், கடனை அடைப்பதற்காக திருட்டு தொழிலில் இறங்கியதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முதல்முறையாக திருட்டை செய்ததால், போதிய அனுபவம் இல்லாமல் மாட்டிக்கொண்டதாகவும் அவர் போலீஸ் விசாரணையில் கூறினார். நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.