சென்னை,
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம். இளைஞர்கள் எப்படி போனால் என்ன? என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மது சமுதாயத்தின் பெரும் சாபக்கேடு என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி. தாயை விட, தாய் நாட்டை உயிரினும் மேலாக போற்றும் நாட்டுப் பற்று மிக்கவர்கள் வாழும் நம் நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள ஓர் பள்ளியில் தேச விரோத சக்திகள் சிலர் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தின் மீது மது பாட்டிலை கட்டி தொங்க விட்ட செய்தியானது தேசிய கொடிக்கும், கொடிக்கம்பத்திற்கும் மிகப்பெரிய அவமரியாதை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேசிய கொடியை கீழே விழாமல் பாதுகாத்து தன்னுயிரை தியாகம் செய்த திருப்பூர் குமரன் பிறந்த நாட்டில் மதுவினால் மதியிழந்து இளைஞர்கள் சீரழிவதை காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம். இளைஞர்கள் எப்படி போனால் என்ன?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.