திருநங்கைகள்- ஊழியர்கள் 
தமிழக செய்திகள்

கட்டாயப் பண வசூல்: கும்மிடிப்பூண்டி தொழிற்சாலைகளுக்குள் அத்துமீற முயன்ற திருநங்கைகள்

கடந்த 17-ந்தேதி அன்று திருநங்கைகள் சிலர் ஆயுத பூஜை பண்டிகைக்காக மாமூல் கேட்டு அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கட்டாயப் பண வசூலில் ஈடுபட முயன்ற திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேட்டை மூடி தடுத்த ஊழியர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பல தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அன்று திருநங்கைகள் சிலர் ஆயுத பூஜை பண்டிகைக்காக மாமூல் கேட்டு அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆவேசமாக தொழிற்சாலையின் பிரதான நுழைவாயில் கேட்டைத் தள்ளி உள்ளே நுழைய முயன்றனர்.

வீடியோ வைரல்

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியாளர்களும் ஊழியர்களும், உடனடியாக கேட்டைப் பூட்டி அவர்களை உள்ளே வரவிடாமல் தடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

போலீசில் புகார்

ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில், ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு தொகை தர வேண்டும் என நிர்ணயம் செய்து, திருநங்கைகள் தங்களைக் கட்டாயப்படுத்தி மிரட்டுவதாக தொழிற்சாலை நிர்வாகங்கள் தரப்பில் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் கடும் எச்சரிக்கை

இந்த புகார்களைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து, மிரட்டிப் பண வசூலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்பேட்டைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT