தேனி,
தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கும்பக்கரை அருவி விளங்குகிறது. மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அருவி அமைந்துள்ளதால் அதனை ரசித்தபடியே அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுவார்கள்.
கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து அருவிக்கு தண்ணீர் வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகை தருவார்கள். இந்த நிலையில் கொடைக்கானல், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை. இதனால் அருவிக்கு தண்ணீர் வருவதும் குறைய தொடங்கியது.
இதனால் அருவியில் சிறிதளவு தண்ணீரே கொட்டியது. இதையடுத்து அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், அருவிக்கு நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டவுடன் அனுமதி வழங்கப்படும் என்றனர்.