திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 134 நாட்டுத் துப்பாக்கிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரோடு ரோலர் ஏற்றி அதிரடியாக அழிக்கப்பட்டன.
வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் பொருட்டு, உரிய அனுமதியின்றி பொதுமக்கள் வைத்துள்ள நாட்டுத் துப்பாக்கிகளைத் தானாக முன்வந்து ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தன. அதன்படி, மாவட்டத்தின் 9 வனச்சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 134 நாட்டுத் துப்பாக்கிகள் சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் சுமார் 12:50 மணியளவில் மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் முன்னிலையில், சேகரிக்கப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் வரிசையாக தரையில் அடுக்கப்பட்டன. பின்னர் அதன் மீது ரோடு ரோலர் வாகனம் ஏற்றி அவை அனைத்தும் முற்றிலும் நசுக்கப்பட்டு வனத்துறையினரால் அழிக்கப்பட்டன.
இந்த அதிரடி நிகழ்வின் போது மாவட்ட வன அலுவலர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பலர் உடனிருந்தனர். வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோத வேட்டையாடுதலை தடுக்கவும் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.