தமிழக செய்திகள்

அரசியல் பாகுபாடுகளை மறந்து... அண்ணா பிறந்தநாளில் இனிப்பு பரிமாறிய தி.மு.க.-அ.தி.மு.க. நிர்வாகிகள்!

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

திருப்பூர்,

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர்.

மாலை அணிவித்து மரியாதை

அதே நேரத்தில், ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இரு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில், அருகருகே நடைபெற்றதால் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒரே இடத்தில் திரண்டனர். இரு தரப்பினரும் போட்டிப்போட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இனிப்பு பரிமாற்றம்

அப்போது எதிர்பாராத விதமாக, இரு கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்ததுடன், நேருக்கு நேர் கை கொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த இனிப்புகளையும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.

பொதுமக்கள் நெகிழ்ச்சி

பொதுவாக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக செயல்படும் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள், அண்ணாவின் பிறந்தநாளில் அரசியல் வேறுபாடுகளை மறந்து இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT