தமிழக செய்திகள்

த.வெ.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன்

ஒரு போரியக்கத்தின் தலைவர் எப்பொழுதும் தவறான முடிவின் பின்னே செல்வதாக முருகுமாறன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம்,

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், பொதுச்செயலாளர் ஆனந்தை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார்.

அ.தி.மு.க. நிர்வாகிகள்

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் அதிகரித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இதனால், அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டநிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள். குறிப்பாக த.வெ.க.வில் அதிகம் பேர் இணைந்து வருகின்றனர்.

காட்டுமன்னார் கோவில்

முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ , செம்மலை உள்பட பலரும் தேர்தல் தோல்விக்குப் பிறகு த.வெ.க.வில் இணைந்துள்ள நிலையில், தற்போது அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2011, 2016 என 2 முறை அ.தி.மு.க. சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நின்று இவர் வெற்றி பெற்றிருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் இன்று அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவலியோடு என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்.

நான் வளர்த்த கட்சி

ஒரு நல்ல தலைவர் தான் தலைமையேற்றுள்ள இயக்கத்தின் அனைத்து தொண்டர்களையும் தாயன்பு கொண்டு அரவணைக்க வேண்டும். தலைவருக்கு துன்பம் என்றால் தொண்டர்கள் கண்ணீர் சிந்த வேண்டும். தொண்டர்களுக்கு துன்பம், துயரம் என்றால் தலைவரின் கரங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும்.

மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்கு பின் மாற்று இயக்கத்தில் இருந்து கோடிகள் என்னை பலமுறை முத்தமிட்ட போது அவற்றை புறந்தள்ளி கொள்கை வழி நின்று கழகத்தின் மாண்பை காத்த உண்மையை தொண்டன் நான். “மதியாதார் வாசல் மிதியாதே” என்ற முதுமொழியை நெஞ்சில் நிறுத்துகிறேன்.

மாணவன் பருவம் முதல் நகமும் சதையுமாக உடலும் உயிருமாக பயணித்து பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலகி கொள்ள வேண்டிய சூழ்நிலையை தலைமை எனக்கு ஏற்படுத்திய நிலையை எண்ணி மனம் வலிக்கின்றது. “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி” “நான் வளர்த்த கட்சி” என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும். “ஒரு போரியக்கத்தின் தலைவர் எப்பொழுதும் தவறான முடிவின் பின்னே செல்கின்றார்”.” என்று தெரிவித்திருந்தார்.

த.வெ.க.வில்

இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், பொதுச்செயலாளர் ஆனந்தை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். தாராபுரத்தில் சற்று நேரத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை முருகுமாறன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT