தமிழக செய்திகள்

சிங்கப்பூர் மருத்துவமனையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி

கரூரில் ரோடு போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூரில் ரோடு போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனுவில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பொறுப்பேற்ற அருண், இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த மாதம் 23-ந்தேதி அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்தவுடன் அதிரடி சோதனை வேட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கினார்கள்.

லஞ்ச ஒழிப்பு விசாரணை

அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு உள்பட 21 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 25-ந்தேதி அன்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு 3-ந்தேதி (அதாவது இன்று) ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பினர்.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு இதய தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் 10 நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறவேண்டும் எனவும், அதனால் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையில் அவருக்கு இஸ்கிமிக் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு அதிகரிப்பு, தோல் சம்பந்தமான நோய் அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.