சென்னை,
சென்னை தென்மேற்கு மாவட்டம் தியாகராயர்நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக செயல்பட்டு வந்தவர் கருணாநிதி. இவர் சென்னை தியாகராயர்நகர் (தி.நகர்) தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.நகர் தொகுதியில் கருணாநிதி வெற்றிபெற்றார். இவர் மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அன்பழகனின் சகோதாரர் ஆவார்.
இதனிடையே, கடந்த சட்டசபை தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட கருணாநிதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக தி.நகர் தொகுதி திமுக வேட்பாளராக மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மகன் ராஜா அன்பழகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் விரக்தியடைந்த கருணாநிதி தியாகராயர்நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் பதவியை கடந்த மார்ச் 28ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கி இருந்தார். அதேவேளை, சட்டசபை தேர்தலில் தி.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் என்.ஆனந்த் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருணாநிதி இன்று தவெகவில் இணைந்தார். திமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. கருணாநிதி அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.