தமிழக செய்திகள்

மருந்து நிறுவனத்தில் ரூ.8 கோடி கையாடல்: முன்னாள் மேலாளர் கைது

சுமார் 45 வங்கிக் கணக்குகளுக்கு ரூ.8 கோடியே 21 லட்சத்தை மாற்றி மோசடி செய்தது நிறுவனத்தின் கணக்கு தணிக்கையில் தெரியவந்தது.

ஆவடி,

அம்பத்தூர் அருகே மருந்து நிறுவனத்தில் ரூ.8.21 கோடி கையாடல் செய்த முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

ரூ.8.21 கோடி கையாடல்

அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் தொழிற்பேட்டையில் தனியார் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை மேலாளராக பணியாற்றியவர் சுதிர் கட்டி காந்தி (வயது 30). இவர், பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்ததற்கான பணத்தை அனுப்பும்போது, அதில் ஒரு பகுதியை தனது பெயரிலும், ஆந்திராவில் வசிக்கும் உறவினர்கள் பெயரிலும் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றி கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் 45 வங்கிக் கணக்குகளுக்கு ரூ.8 கோடியே 21 லட்சத்தை மாற்றி மோசடி செய்தது நிறுவனத்தின் கணக்கு தணிக்கையில் தெரியவந்தது.

கைது

இதுகுறித்து நிறுவனத்தின் தற்போதைய மேலாளர் கார்த்திக் (35) அளித்த புகாரின்பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் பதுங்கியிருந்த சுதிர் கட்டி காந்தியை, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT