தமிழக செய்திகள்

ரூ. 634 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டார்.

சென்னை,

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு செயல்பட்டார். இதனிடையே, நகராட்சி நிர்வாகத்துறையில் 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம், டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணி நியமனம், டெண்டர் முறைகேடுகள், சதித்திட்டங்கள் மூலம் ரூ. 1020 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஊழலுக்கு ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது.

ரூ. 634 கோடி லஞ்சம்

அதில், நகராட்சி நிர்வாகத்துறையில் மட்டும் ரூ. 634 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு 2538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. மேலும், இந்த ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்யவும் அமலாக்கத்துறை அறிவுறுத்தியது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை 2 முறை கடிதம் எழுதியிருந்தது.

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

இந்நிலையில், தவெக அரசு அமைந்துள்ள நிலையில் ஊழல் , லஞ்ச புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ. 634 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழல், லஞ்சப்புகாரில் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் அடிப்படையில் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.