தமிழக செய்திகள்

மண், ஜல்லி நான் எடுக்கவில்லை; குவாரி விதிமீறல் ரெய்டு குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேச்சு

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் இன்று ரெய்டு நடைபெற்றது.

மதுரை,

மண், ஜல்லி நான் எடுக்கவில்லை என்று குவாரி விதிமீறல் ரெய்டு குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் அமைந்துள்ள கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில், அரசு விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் செம்மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரெய்டு

அந்த புகார் தொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தியின் வீடு உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், குவாரி விதிமீறல் தொடர்பாக ரெய்டு நடந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

2019ல் எனக்கு சொந்தமான சத்திரவெள்ளாளபட்டியில் உள்ள இடத்தில் குவாரி அமைப்பதற்காக மாவட்ட கலெக்டரும், நானும் சேர்ந்து 5 ஆண்டுகள் குத்தகைக்கு ராஜாமணி, ஆனந்த்ராஜ் ஆகியோருக்கு கொடுத்தோம்.

மாவட்ட கலெக்டரின் அனுமதியோடு முறையாக 2019-24 வரை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கல் குவாரிக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் குவாரிக்கான உகந்த கல் கிடைக்கவில்லை என்று 2021ல் ஆனந்த்ராஜ் கைவிடப்பட்டார். அதேபோல் ராஜாமணியும் குவாரிக்கான அந்த கற்கள் வெட்டி எடுக்க பணிகள் மேற்கொண்டார். ஆனால், அந்த இடத்தில் கற்கள் இல்லை. இதனால், அந்த இடத்திற்கு அருகே உள்ள எனது பட்டா இடத்தில் மண் எடுத்திருப்பதாக உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனக்கு தெரியாது

நான் கலெக்டரிடம் முறையாக அனுமதிபெற்று குத்தகைக்கு விட்டுள்ளேன். மற்றபடி விதிகளை மீறி மண் எடுத்திருப்பது எனக்கு தெரியாது என ஆர்.டி.ஓ. அலுவலரிடம் தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக கோர்ட்டிற்கும் சென்றுள்ளேன். அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து முறையாக நாம் கேட்கும் அளவை அளந்து முறைப்படுத்தி செய்யவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவையும் கடைபிடிக்காமல் தன்னிச்சையாக ஸ்கேன் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், எனது பட்டா இடத்தில் அளவுக்கு மீறி மணல், கல் எடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக வழக்கு தொடந்துள்ளோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனது இடத்தில் நான் கல், மண் எடுக்கவில்லை. குத்தகைக்கு 2 பேரிடம் கொடுத்துள்ளோம். அவர்களிடமும் ஆர்.டி.ஓ. முறையாக விசாரணை நடத்தவில்லை.

மண், ஜல்லி, கல் நான் எடுக்கவில்லை

நான் மண், ஜல்லி, கல் எடுக்கவில்லை. நான் அதை செய்யவில்லை. எனது இடத்தில் எனக்கு தெரியாமல். என் வீட்டில் நடக்கும் ரெய்டில் உண்மையில்லை. இந்த ரெய்டு விவகாரத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன்.

குவாரியை பொறுத்தவரை மாவட்ட கலெக்டரிடத்தில் 2019ம் ஆண்டு அனுமதிபெற்றுதான் குத்தகைக்கு கொடுத்துள்ளேன். அதுதவிர மற்ற விவகாரங்களில் என்ன நடந்துள்ளது என்று ஒருபோதும் எனக்கு தெரியாது. குவாரியில் இருந்து மண், ஜல்லி, கல் எதுவும் நான் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT