தமிழக செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன் என்று முருகுமாறன் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலையில், அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் ஐக்கியமாகி வருகிறார்கள். குறிப்பாக தவெகவில் அதிகம் பேர் இணைந்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ , செம்மலை உள்பட பலரும் தேர்தல் தோல்விக்குப் பிறகு தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2011, 2016 என 2 முறை அதிமுக சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நின்று இவர் வெற்றி பெற்றிருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். "இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன். இன்று கோடிகளை கொண்டவர்களே வேட்பாளர்கள் என தேர்வு செய்ததால் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக கடை கோடியில் நமது கழகம் உள்ளது. உழைத்தவர்களை விட்டுவிட்டு கிடைத்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்தால் களத்தில் வெற்றி பெறமுடியாது, இனி நமது கழகத்தில் கோடிகள் இல்லாத கொள்கை உரம் கொண்ட ஏழை எளியவர்கள்,வறியவர்கள், உண்மையாக உழைப்பவர்கள் அரசியல் அதிகாரம் பெற முடியாது. தமிழகத்தை மீட்போம் 2026 நிகழ்வில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் என்னை முன்நிலைபடுத்தி, நம்பிக்கை ஊட்டி இரவு பகலாக வேலைகளை வாங்கிக் கொண்டு 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் 100% வெற்றி பெறக்கூடிய எனது சொந்த தொகுதியான காட்டுமன்னார்கோயில் தொகுதியை எனக்கு ஒதுக்காமல் தலைமை செய்த துரோகத்தை என் நெஞ்சம் மறக்க மறுக்கிறது.

மாணவப் பருவம் முதல் நகமும் சதையுமாக உடலும் உயிருமாக பயணித்து பணியாற்றிய இப்பேரியக்கத்தில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய சூழ்நிலையை தலைமை எனக்கு ஏற்படுத்திய நிலையை எண்ணி மனம் வலிக்கின்றது. "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னை வளர்த்த கட்சி" "நான் வளர்த்த கட்சி" என்ற நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து நிற்கும்." என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT