சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்தவர் பனையூர் பாபு. கடந்த 2021 தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2026 தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “சமீப காலமாக தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் எனக்கு பெரும் வியப்பையும், வேதனையையும் அளிக்கிறது. நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு, மீண்டும் இரவில் சமூக வலைதள நேரலையில் முற்றிலும் முரணான ஒரு நிலைப்பாடு என தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசுவது அரசியல் களத்திலும், தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது.
நேற்று வரை ஒரு நடிகரை விமர்சித்துவிட்டு, அதே பிள்ளையை தத்தெடுப்பது போல் நிலைப்பாடு எடுப்பது அவர் இதுவரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கருத்தியலிலும் தடம் மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. ஆட்சி அதிகாரங்கள் வரும், போகும். அது நிலையற்றது.
கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும், அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின் கீழ் இனியும் என்னால் பயணிக்க இயலாது. எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பனையூர் பாபு தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம் ஆகினர்.