ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்தர் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறைக்குளம் பகுதியை சேர்ந்த ஆர்தர், சிக்கல் பகுதியில் அரசு மதுபான கடை அருகே நின்றிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆர்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் இருந்த கந்தன் என்பவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சகேயு என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தனது தந்தைக்கும், ஆர்தருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாகவும் சகேயு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.