சென்னை,
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.
தொடர்ந்து, 2011-ம் ஆண்டு தேர்தலில் ராசிபுரத்தில் இருந்தும் 2016-ம் ஆண்டு தேர்தலில் அவினாசி தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ப.தனபால், சபாநாயகராக இருந்தார். ஆனால், தற்போது நடைபெற்ற தேர்தலில் அவருக்கு அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதற்கிடையில் அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் ப.தனபால் விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ அதிமுகவில் இருந்து நான் விலகி நீண்ட நாட்கள் ஆகிறது. என்னை போன்றவர்களை புறக்கணித்ததால் அதிமுகவை இன்று மக்கள் புறக்கணித்துள்ளனர். அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, அதிமுகவில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். தவெகவில் எனது மகன் அமைச்சராக இருப்பது மகிழ்ச்சி" என்று தனபால் தெரிவித்துள்ளார்.
தனபாலின் மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வன் த.வெ.க.வில் இணைந்து ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது டி.லோகேஷ் தமிழ்செல்வனுக்கும் த.வெ.க. அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.