சென்னை,
சென்னை, அடையாறு மண்டலம், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில்,“உலகம் உங்கள் கையில்“ எனும் மாபெரும் திட்டத்தின்கீழ், 4 கல்லூரி மாணவ-மாணவிகள் 1,627 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதன்பின்னர் அவர் பேசியதாவது:-
வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 918 பேருக்கும், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாறு பகுதியில் உள்ள பேட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் 655 பேருக்கும், எம்.ஏ.சிதம்பரம் School of Nursing ஆகிய கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என ஆக மொத்தம் 1,627 பேருக்கு மடிக்கணினிகள் இன்று வழங்கப்பட்டது.
7.5% இடஒதுக்கீடு மூலம் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் மற்றும் பிற தொழில்நுட்பவியல் என மேற்படிப்பிற்கு 7.5% இடஒதுக்கீடு தந்திருக்கிறார்கள். இப்படி பல சலுகைகளை வழங்கி வரும் காரணத்தினால்தான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மத்திய அளவிலான உயர்கல்வி சேர்க்கைக்கான சதவிகிதம் 28.4 ஆனால் தமிழ்நாடு 47% என்று மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு 47% உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் இருக்கின்ற 36 மாநிலங்களில் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. கல்வியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்படுத்துகின்ற திட்டங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.