மயக்கமடைந்த முதியவர் 
தமிழக செய்திகள்

தேனி கடமலைக்குண்டு காத்திருப்பு போராட்டத்தில் முதியவர்கள் 4 பேர் மயக்கம்!

அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் குறுகலான போராட்டப் பந்தலில் திரண்டிருந்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பேருந்து நிலையப் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மலைக்கிராம மக்களில், கடும் வெயில் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக 4 முதியவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காத்திருப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக அறிவிப்பைத் தொடர்ந்து, வருசநாடு மற்றும் மேகமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர் உள்ளிட்ட 98 மலைக்கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரியும் கடந்த 26-ந்தேதி முதல் பொதுமக்கள் கடமலைக்குண்டு புதிய பேருந்து நிலையத்தில் குடும்பம் குடும்பமாக சமைத்து இரவு, பகலாகத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயக்கம் அடைந்த முதியவர்கள்

அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் குறுகலான போராட்டப் பந்தலில் திரண்டிருந்தனர். இந்நிலையில், இன்று( திங்கட்கிழமை) நிலவிய கடும் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக வாலிப்பாறையைச் சேர்ந்த சரசுமணலாத்துக்குடிசையைச் சேர்ந்த சேகர் உள்ளிட்ட 4 முதியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

மீட்பு - சிகிச்சை

முதியவர்கள் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை உடனடியாக மீட்டனர். போராட்டக் களத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT