தமிழக செய்திகள்

பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள்: அரசு அனுமதி அளிக்கக்கூடாது - வேல்முருகன்

கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மேலும் நான்கு கிணறுகள்

கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டை அருகே கடற்பகுதி CRZ-IVA (Coastal Regulation Zone) எல்லைக்குள் 18 கிலோ மீட்டர் தொலைவில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால், அதே இடத்தில் மேலும் நான்கு கிணறுகளை அமைக்க அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வாழ் உயிரினங்களும், சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் 4 கிணறுகளை அமைக்க அந்த நிறுவனம் முடிவு செய்கிறது. கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த முயல்வதை ஏற்க முடியாது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுடன், விளிம்பு நிலையில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.

நிராகரிக்க வேண்டும்

தமிழகத்தையொட்டிய கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அத்திட்டங்களுக்கு கடந்த கால மாநில அரசுகள் அனுமதி அளிக்கவில்லை.

அதே நிலைதான் இனியும் தொடர வேண்டும். சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT