சென்னை
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா…? என மு.க. ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதி முழுவதும் இரவு, பகலாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மேலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தாராபுரத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா…? என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி என தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே! என பதிவிட்டு உள்ளார்.