சென்னை,
தமிழகத்தின் முதல்-அமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10-ந்தேதி பதவியேற்றார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் அறிக்கையில் த.வெ.க. அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் நான்கே மாதங்களில் நனிசிறக்கும் நான்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக, ‘மக்களுக்காக, மக்களுடன்’ என்ற வாசகத்துடன், கடந்த 4 மாதங்களில் த.வெ.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோவை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நாளிலேயே, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை அமைப்பதற்கான கோப்புகளில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். தொடர்ந்து ஜூன் 9-ந்தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து செப்டம்பர் 22-ந்தேதி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 28-ந்தேதி, த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
கடந்த அக்டோபர் 2-ந்தேதி மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை வழங்கும் ‘வெற்றிப் பயணம் திட்டம்’ தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நான்கு திட்டங்களை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.