சென்னை,
சென்னை அண்ணாசாலையில் உள்ள 14 கிரவுண்ட் நிலத்தின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்ததாக வடசென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், திமுக கவுன்சிலர் ராணி உள்பட 4 பேர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரை சேர்ந்த அன்பரசு என்பவருக்கு சொந்தமான நிலத்தின் பத்திரத்தை மிரட்டி வாங்கி அதை வைத்து வங்கியில் கடன் வாங்கி திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மோசடி செய்துள்ளதாக எழுந்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரை சேர்ந்த அன்பரசு என்பவர் கடந்த 2024ம் ஆண்டு தனது பெயரில் உள்ள நிலத்தின் பவர் பத்திரத்தை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மிரட்டி வாங்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அந்த நில பத்திரத்தை அடமானம் வைத்துக்கொண்டு வங்கியில் பணம் வாங்கிக்கொண்டு அந்த பணத்தை தராமல் மோசடி செய்ததாகவும், பணத்தை கேட்க சென்றபோது அண்ணா நகர் ரவுண்டானா பகுதியில் சென்றபோது சாதியை கூறி தாக்கியதாகவும் அன்பரசு கடந்த 2024ம் ஆண்டு அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, வடசென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மற்றும் 102வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி, திமுக எம்.பி.யின் உதவியாளர் ஆசைத்தம்பி, நாராயணன் உள்ளிட்டோர் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக கடந்த திமுக ஆட்சியில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் பணமோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சித்தார்த் உள்பட 4 பேர் மீதும் பணமோசடி, தீண்டாமை வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.