தமிழக செய்திகள்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இலவச முடி காணிக்கை திட்டத்தில் மோசடி: 10 பேர் மீது வழக்கு

அனுமதி இல்லாமல் 28 முடி திருத்தும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணி செய்தது தெரியவந்தது.

இருக்கன்குடி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உதவி ஆணையர் அலுவலகத்தில் கடந்த 17-ந்தேதி அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இலவச முடிக்காணிக்கை திட்டத்தின்படி, பக்தர்களது முடி காணிக்கைக்கு தலா ரூ.30 வீதம் முடிதிருத்தும் தொழிலாளர்களான 6 பேருக்கு சம்பளமாக மாத இறுதியில் அரசு வழங்குகிறது.

ஆனால் அரசால் நியமிக்கப்பட்ட 6 முடி திருத்தும் தொழிலாளர்களுடன் எந்தவித அனுமதியும் இல்லாமல் 28 முடி திருத்தும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணி செய்து வந்ததும், நியமிக்கப்பட்ட 6 பேர் கோவிலில் இருந்து பெரும் தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பதிலாக வேலை செய்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், பக்தர்களிடம் வசூல் செய்த பணத்தில் இருந்து தினக்கூலியாக மட்டுமே கொடுத்து வந்ததும் சோதனையில் தெரியவந்தது.

2022-ம் ஆண்டு முதல்...

மேலும் செய்யாத வேலையை செய்ததாக காட்டி, அரசிடம் கூடுதல் பணம் பெறுவதற்காக இந்து சமய அறநிலையத் துறை வழிகாட்டுதலுக்கு மாறாக, பக்தர்களின் புகைப்படம் இல்லாமல் டோக்கன்கள் வழங்கப்பட்டதும், பக்தர்களே இல்லாத நிலையில் 55 டோக்கன்களை அச்சடித்து கவுண்டரில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு முதல் இதுவரை பல கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சோதனையின்போது சட்டவிரோத முடிதிருத்தும் தொழிலாளர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.59,520-ம், உதவி ஆணையர் அலுவலகத்தில் காவலர் சிங்காரவேலுவிடம் இருந்தும் கணக்கில் வராத ரூ.20,500 என மொத்தம் ரூ.80,020 கைப்பற்றப்பட்டது.

10 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் சோதனை மற்றும் விசாரணையின் முடிவில் உதவி ஆணையர் இளங்கோவன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, கோவில் காவலர் சிங்காரவேலு, அலுவலக உதவியாளர் கணேசன், உபகாவல் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் யோகராஜன், சாத்தூரப்பன், அழகுமலை, சத்தியமூர்த்தி, ஸ்ரீதர், வீரணன் ஆகிய 10 பேர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT