தமிழக செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

சிவசங்கரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

போலீஸ் காவல்

இந்த வழக்கில் இளஞ்செழியனை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை ஜூலை 6-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்தது.

இதற்கிடையே, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெற்றதாகக் கூறப்படும் பண மோசடி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதன்படி, ஜூலை 1-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம்

இந்த வழக்கில் சிவசங்கரிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.