சென்னை,
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயணத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பல்வேறு வகையான அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறன்களில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவருக்கு தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டது.
இதற்கிடையே தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பயன்படுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் உதவியாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்துக் கழகங்களின் தாழ்தளப் பஸ்கள், விரைவு பஸ்கள், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ்., புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பஸ்களில் கட்டணமில்லாமல் செல்லும் வகையில் பயண திட்டத்தை விரிவுபடுத்தி உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.