தமிழக செய்திகள்

தமிழகத்தில் விரைவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

இனி வாங்கப்படும் பேருந்துகள் எல்லாம் ஏசி பேருந்துகளாக வாங்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் விருப்பம்.

சேலம்,

போக்குவரத்துத்துறை அமைச்சர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக மகளிர் பயணம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துவிட்டது. அதற்கான அறிவிப்பை அவர் விரைவில் அறிவிப்பார். போக்குவரத்துத் துறை வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். வருவாயைப் பெருக்கி, போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நலனை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமங்கள் அனைத்துமே இணைக்கப்பட வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் முதன்மை கோரிக்கையாகும்.

ஏசி பேருந்துகள்

முதல்-அமைச்சர் செல்லும் அளவுக்கு பேருந்துகள் இருக்க வேண்டும். சமீபத்தில் பேருந்தில் அவர் பயணித்ததை பார்த்திருப்பீர்கள். தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும். இனி வாங்கப்படும் பேருந்துகள் எல்லாம் ஏசி பேருந்துகளாக வாங்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் விருப்பம். அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம் வருகின்றன. காத்திருந்து மருத்துவரை மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அதை சரி செய்வதற்கான பணிகள் படிப்படியாக செய்யப்படும். இது மக்களுக்கான ஆட்சி. மக்கள் நலனுக்கான திட்டங்களும் பணிகளும் படிப்படியாக செய்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.