தமிழக செய்திகள்

‘பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன’ - சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொலியை வைத்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

புறநகர் பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் வெற்றிப்பயணம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பெண்கள் இந்த பேருந்துகளில் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘எக்ஸ்’ தளத்தில் பயனர் ஒருவர் சென்னை மாநகர பேருந்தின் படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டு, “இந்த பேருந்துகளில் இலவச பயணம் இல்லையாமே?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“குறிப்பிட்ட காணொலி, “வெற்றிப் பயணம்” திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதற்கு முன்பாகப் பதிவிடப்பட்டதாகும். தமிழ்நாடு முதல்-அமைச்சரால் “வெற்றிப் பயணம்” திட்டம் 02.10.2026 அன்று காலை 10:30 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட காணொலியை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களிலும் (ETM) தேவையான மென்பொருள் புதுப்பிக்கப்பட்டு, தற்போது பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தற்போது இத்திட்டம் முழுமையாக நடைமுறையில் உள்ளதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT