சென்னை,
விடுதலை வீரர் ஒண்டிவீரனின் 255-ஆம் நினைவு நாளில் அவரது வீரத்தையும், துணிச்சலையும் போற்றுவோம் மற்றும் தேசப்பற்றை கடைபிடிப்போம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில் சிப்பாய்க் கலகம் வெடிப்பதற்கு முன்பாகவே 1755-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற பூலித்தேவனின் படைத்தளபதியும், நண்பனுமான ஒண்டிவீரனின் 255ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவருக்கு நான் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவரது வீரத்தையும், தேசப்பற்றையும் போற்றுகிறேன்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக பூலித்தேவனும், ஒண்டி வீரனும் நடத்திய போர்கள் வீரம் செறிந்தவை. 1755 முதல் 1760-ஆம் ஆண்டு வரை பூலித்தேவனுடன் இணைந்தும், தனித்தும் போரிட்டு குறைந்தது 6 முறை ஆங்கிலேயர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதிகளின் படைகளை வீழ்த்திய பெருமை ஒண்டி வீரனுக்கு உண்டு. அவரது நாட்டுப்பற்று போற்றத்தக்கது; அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.